தமிழ் சினிமாவில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான நாயகர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார்கள்…? இதைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். கனவுத் தொழிற்சாலையில் “ஸ்டார்’ அந்தஸ்து பெற்று, வெற்றி நாயகனாக கோடம்பாக்கத்தில் கொடி நாட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும்
தொடர் வெற்றியைக் கொடுப்பது சிம்ம சொப்பனம்! சறுக்கல்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகக்கூடிய ஒன்றுதான். ஆனால், அந்தச் சறுக்கல்களைத் தாண்டி வாழ்க்கையில் நம்பிக்கையுடன் வீறு நடைப் போடும்போதுதான் வெற்றிக் கொடி, உயர ஆரம்பிக்கும். சறுக்கினாலும் முறுக்கை விடாமல் இருந்தால் தோல்வியோடு துவள வேண்டியதுதான். “எதற்கு இப்படித் தூபம் போடுகிறீர்கள்? நேரடியாக விஷயத்திற்கு வாங்க’ என்கிறீர்களா?
1992-ல் “நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலமாக அறிமுகமான விஜய்யின் ஆரம்ப காலப் படங்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லையென்றாலும் அந்தப் படங்களில் எல்லாம் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து தலைக்காட்டிக் கொண்டிருந்தது. அது ஆக்ஷனோடு கூடிய திரைக்கதை. இந்த ஆக்ஷன் ஃபார்முலாதான் பின் நாட்களில் விஜய், “மாஸ் ஹீரோ’வாக தமிழ் சினிமாவில் தனித்து நிற்க வழி செய்தது.
“பூவே உனக்காக’ திரைப்படத்திற்கு முன்பு வரை விஜய் என்கிற நடிகனுக்கு ரசிகர்கள் பட்டாளம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை. தெளிவான திரைக்கதையுடன், குடும்ப ஒற்றுமையோடு காதலையும் நகைச்சுவையையும் சேர்த்து தனது வழக்கமான ஸ்டைலோடு அந்தப் படத்தைக் கொடுத்திருந்த இயக்குநர் விக்ரமனின் ஃபார்முலாதான், விஜய் என்கிற நடிகரை முதன் முதலாக பரவலான ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்தியது. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விஜய்யின் பின்னால் ரசிகர்கள் பட்டாளம் திரள ஆரம்பித்ததும் இந்தப் படத்திலிருந்துதான். ஏற்கனவே விஜய் ஆக்ஷனுக்குத் தயாராகியிருந்தார். இந்நிலையில் “பூவே உனக்காக’ படம், ஆக்ஷன் மட்டுமின்றி ரொமான்ஸýம் நகைச்சுவையும்கூட விஜய்க்கு கை வந்த கலை என்பதை நச்சென்று நிரூபித்தது.
“பூவே உனக்காக’ படத்தைத் தொடர்ந்து “மாண்புமிகு மாணவன்’ “காலமெல்லாம் காத்திருப்பேன்’ “ஒன்ஸ்மோர்’ “வசந்த வாசல்’ “செல்வா’ “லவ் டுடே’ “நேருக்கு நேர்’ என்று வரிசையாகப் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் இந்தப் படங்கள் யாவும் காதலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டன. எனவே விஜய்யின் அடுத்த கட்ட பரிமாணம் என்பது வெளியுலகுக்குத் தெரியாமலேயே இருந்து வந்தது. அந்தச் சமயத்தில்தான், கேரளத்தில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாசிலின் இயக்கத்தில், தமிழில் “காதலுக்கு மரியாதை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. விஜய்யின் சினிமா பாதையில் திருப்புமுனையாக அமைந்த படமும் இதுதான்!
“நாயகனுக்குரிய கட்டுமஸ்தான உடலோ, கவர்ந்திழுக்கும் முகத் தோற்றமோ, கேட்கத் தூண்டும் குரல் வளமோ விஜய்க்கு இல்லை’ என்று சில விமர்சகர்கள் அப்போது வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் “காதலுக்கு மரியாதை’ வெளிவந்த பிறகுதான் விஜய்யை குறைத்து மதிப்பிட்டவர்கள் மூக்கின் மீது விரல் வைத்து, எழுதுகோலை மாற்றி கொண்டார்கள். உன்னத இயக்குநரான பாசில், தெளிவான திரைக்கதையோடு குடும்பத்தின் ஒற்றுமையையும் காதலையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததும், பாத்திரங்களை மிகச் சரியாக தேர்வு செய்து, தேவையான நடிப்பை மட்டும் வாங்கியிருந்ததும் “காதலுக்கு மாரியாதை’ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தன. ஏற்கனவே வெளியாகி சக்கைபோடு போட்ட “பூவே உனக்காக’ படத்தின் வெற்றியையே இப்படம் விஞ்சி நின்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் பல படங்களில் நடித்தாலும் அவருக்குத் “துள்ளாத மனமும் துள்ளும்’ “குஷி’ “ஃப்ரெண்ட்ஸ்’ “கில்லி’ ஆகிய படங்களே வசூலில் சாதனைப் படங்களாக அமைந்தன.
இந்தப் படங்களிலிருந்து விஜய்யின் வெற்றிப் ஃபார்முலாவை நாம் கணிக்க முடியும். ஆக்ஷன் கலந்த காதல், நகைச்சுவை பாணி அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்ததோடு ஏராளமான ரசிகர் மன்றங்களையும் உருவாக்கித் தந்தது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இப்படித்தான் விஜய் இடம் பிடித்தார். அவருக்கு இணையாக பல வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜித்திற்கும் இவருக்குமான ஆரோக்கியமுள்ள தொழில் போட்டி,கோலிவுட்டிற்கு வலிமை தந்தது என்று பெருமிதத்தோடு சொல்லலாம்.
சரி! அடுத்த கட்டத்துக்கு வருவோம்! சமீப காலங்களில் விஜய்யின் வெற்றி ஃபார்முலா, ஏனோ அவருக்குத் தொடர்ந்து கை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி அவருடைய சமீபகாலப் படங்கள், எதிர்பார்த்த வெற்றியை ஈன்றெடுக்கவில்லை. “கில்லி’,”போக்கிரி’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சுமாரான வெற்றியுடனே நின்று கொண்டது. விஜய்யின் படங்கள் பெரும்பாலும் அஜித்தின் படங்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்படும்.
இந்தப் போட்டியில் இருவரும் சரிக்குச் சமமான வெற்றிகளைக் குவித்து, ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜீத் என்று பேசப்படுமளவிற்கு உயர்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் இருவருடைய சமீபத்திய படங்கள் யாவும் பெரிதாகப் பேசப்படாதது, ரசிகர்களைப் பொருத்தவரை துரதிருஷ்டமே! இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில் “பில்லா’ வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமானது. இது விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையைத் தூண்டுமளவிற்குப் போனது எனலாம்.
இப்படிப்பட்ட வித்தியாச சூழ்நிலையில்தான் விஜய் திடீரென அரசியல் பயணத்தில் பிரவேசிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதனை முன்னிட்டு அவர் டெல்லியில் உள்ள பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணின. எது எப்படியோ… விஜய்யின் அரசியல் மீதான ஆர்வம், இந்த நிகழ்வுகளின் வழியாக எந்த அரசியல் சார்பும் இல்லாத ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கின்றனர். “விஜய் அரசியலுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தால் என்ன செய்வது?’ என்று சில தயாரிப்பாளர்களே கவலைப்பட்டதாகவும் தகவல் உண்டு.
இந்தத் தருணத்தில், சூர்யா நடித்த “சிங்கம்’ வெளியாகி சிம்ம கர்ஜனையாக வெற்றி சங்கு ஊத, கோலிவுட்டில் “மும்முனைப் போட்டி’க்கு அஸ்திவாரம் போடப்பட்டது. ஏற்கனவே களத்தில் அஜித் இருப்பதும், மேலும் சூர்யாவும் அந்தக் களத்தில் போட்டிக்கு நிற்பதும் தற்போது விஜய்க்கான நெருக்கடியை மேலும் அதிகமாக்கியுள்ளன. இப்போது கட்டாயமாக ஒரு மெகா வெற்றியைக் கொடுத்து தன்னை மீண்டும் நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் விஜய். திறமையானவர்கள், நேசத்தோடு போட்டி போடுவது என்பது கலா ரசிகர்களுக்குத் தித்திப்பான விஷயம்தானே!
ஏற்கனவே “ஃப்ரெண்ட்ஸ்’ படத்தின் மூலம் விஜய்க்கு வெற்றியை வழங்கிய இயக்குநர் சித்திக், “காவலன்’ என்கிற பெயரில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கிக் கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு! இந்த “காவலன்’, மலையாளத்தில் சித்திக் இயக்கிய “பாடிகாட்’ திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்று பெயரெடுத்த அசின், பாலிவுட்டில் சென்று கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவரின் கால்ஷீட்டிற்காகக் காத்திருந்து, தன் படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் சித்திக். அதோடு காமெடிக்கு அதே “ஃப்ரெண்ட்ஸ்’ கூட்டணியில் இருந்த வடிவேலுவையும் துணை சேர்த்திருக்கிறார். பொதுவாக விஜய்க்கு ஆக்ஷன், ரொமான்ஸ் மட்டுமின்றி காமெடியும் நன்றாக வரும் என்பது உலகறிந்த உண்மை. இருந்தபோதிலும் வடிவேலுவையும், அசினையும் இயக்குநர் சித்திக் அழைத்து வந்திருப்பதால் விஜய்க்கு மீண்டும் ஒரு மெகா ஹிட் அமையப் போகிறது என்று ரசிகர்கள், ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்; ஏன் நாமும்தான்!
ஆரம்பத்தில் “காவல்காரன்’ என்றிருந்த படத்தின் தலைப்பு பிரச்சினைக்குள்ளாகி, பிறகு “காவல் காதல்’ ஆகி, அதை ரசிகர்கள் விரும்பாததால் தற்போது “காவலனி’ல் வந்து முடிந்திருக்கிறது. அசினும் பாலிவுட்டில் இப்போது “பயங்கர பிஸி’ என்ற நிலையில் இல்லை. எனவே தமிழில் அழுத்தமான ஒரு “மறு பிரவேசம்’ கொடுக்க, நிச்சயம் காவலனில் கடுமையாக உழைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், செலவைப் பற்றி கவலைப்படாமல், இப்படத்தின் டூயட் காட்சிகளை ஐரோப்பாவில் எடுத்திருக்கிறார் சித்திக். மொத்தத்தில் அசின் – சித்திக் – ஐரோப்பா என்ற பலத்த பின்னணியோடு, முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிக் களத்தில், விரைவில் இறங்கப் போகிறார்.
மலையாளத்தில் தொடர் வெற்றிப் பட இயக்குநராக உள்ள சித்திக்கின் இயக்கத்தில் வெளியான “ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ “காட்ஃபாதர்’, “வியட்நாம் காலனி’, “ஃப்ரெண்ட்ஸ்’,”குரோனிக் பாச்சிலர்’ “ஹிட்லர்’, “இன் ஹரிஹர் நகர்’ உள்ளிட்ட அனைத்துப் படங்களும் மெகா ஹிட்டானவை. மலையாளத்தின் “பெரிய சேட்டன்கள்’ அனைவரும் இவருடைய இயக்கத்தில் நடித்துள்ளார்கள் என்பதாலும், மலையாளத்தின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான பாசிலின் சீடர்தான் சித்திக் என்பதாலும் விஜய்க்கு அவரால் நிச்சயம் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியும். இந்த நம்பிக்கை ரசிகர்கள் மத்தியிலும், விஜய் தரப்பிலும் ஆணித்தரமாகப் பதிந்திருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் பற்றிய அறிமுகத்தைத் தந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய்,
“நான் நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்தின் தலைப்பிற்காக இந்த அளவிற்குப் பிரச்சினைகளைச் சந்தித்தில்லை. முதலில் “காவல்காரன்’ என்று வைத்த தலைப்பு பிரச்சினையை எழுப்பியது. பிறகு, “காவல் காதல்’ என்று மாற்றி வைத்திருப்பதாக யாரோ புரளியை ரசிகர்கள் மத்தியில் பரப்பி விட்டனர்.
இந்தத் தலைப்புப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துதான் நாங்கள் தற்போது “காவலன்’ என்று பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறோம். பொதுவாக என்னுடைய படங்களில் ஆக்ஷன் மேலோங்கியிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஆக்ஷனோடு ஒரு இனிமையான, சுகமான காதலும் இருக்கும். இதில் அப்பாவித்தனமான ரொமான்டிக் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
அசின் ஒரு சிறந்த நடிகை. திடீரென்று அவர் பாலிவுட் பக்கம் போய் பிஸியாயிட்டார். அவரை மறுபடியும் தமிழுக்கு வாங்க என்று கூறி அழைத்து வந்தோம். அவர் மறுபடியும் பாலிவுட் பக்கம் போய்விட்டதால் படம் முடிப்பதில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார். அவரது பேச்சில், அவருக்கே உரிய தன்னம்பிக்கை ஜொலித்தது.
நகைச்சுவையிலேயே நவரசம் காட்டத் தெரிந்த வித்தகரான வடிவேலு, “”நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இயக்குநர் சித்திக் ஸôரிடம்தான் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் நினைத்தது கிடைக்கும் வரை விடவே மாட்டார். அவரது டைமிங் காமெடி சூப்பராக இருக்கும். சில இயக்குநர்களின் படங்களில் என்னதான் காமெடி பண்ணினாலும் கடைசியில் கத்திரி ஒன்றை வைத்திருப்பார்கள். ஆனால், சித்திக் ஸôர் கத்திரியே இல்லாத இயக்குநர்.
இந்தப் படத்தில் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஏகப்பட்ட வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். விஜய்யுடன் இணைந்து நான் பண்ணிய காமெடிகள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்தப் படத்திலும் எங்களது கூட்டணி பண்ணிய ரகளையான காமெடி கண்டிப்பாகப் பேசப்படும். பல்லு முளைத்த குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தாக்கள் வரை அனைவரும் ரசிக்கும் காமெடியுடன் கூடிய படம் இது” என்று அன்றைய தினம் பேசியது, நமது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
“”விஜய்யுடன் இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன் எங்கள் கூட்டணியில் வெளிவந்த “சிவகாசி’, “போக்கிரி’ ஆகிய இரண்டு படங்களும் பெரிய ஹிட். அதனால் இந்தக் “காவலன்’ படமும் நிச்சயம் ஹாட்ரிக் வெற்றியைப் பெறும். விஜய்யின் காதல் படங்களைப் பார்த்து நான் மிகவும் ரசித்திருக்கிறேன். எனக்கும் அந்த மாதிரியான படங்களில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்திருக்கிறேன்.
அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்தை நான் லவ் ஸ்டோரி படமாகத்தான் பார்க்கிறேன்” என்று அசினும் அசத்தலாகப் பேசியது, செய்தித் தாள்களில் விவரமாகவே வெளியாகியுள்ளது.
சிறந்த டைரக்டரான சித்திக், “”காவலன்’ படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியாக வாழ விரும்புகிறார்.
அப்போது தன் மகள் அசினுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய்யை காவலனாக நியமிக்கிறார். இந்தக் காவலன், தாதாவின் சம்மதத்துடன் பின்னால் எப்படி அசினுக்கு கணவனாகிறார்? என்பதை என்னுடைய வழக்கமான திரைக்கதைப் பாணியில் உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.
தமிழில் விஜய் எப்படித் தயாரிப்பாளர்களுக்கெல்லாம் வசூலை வாரிக் கொடுக்கும் நாயகனாக இருக்கின்றாரோ (சில தோல்விப் படங்களை மறப்போம்), அதேபோல பாலிவுட்டில் பல தயாரிப்பாளர்களுக்கு பொன் முட்டையிடம் வாத்தாக இருந்தவர் சல்மான்கான். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு இருந்த அவரின் சமீபத்திய பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வியைத் தழுவி, அவரின் மார்க்கெட்டை படு பாதாளத்திற்குத் தள்ளின.
சுதாரித்துக்கொண்ட சல்மான்கான், முதலில் செய்தது அழுத்தமான கதையுடன் கூடிய விறுவிறுப்பான கமர்ஷியல் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து “டபாங்’ என்ற படத்தில் நடித்ததுதான்! இப்படம் அவர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத்தந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் “டபாங்’ திரைப்படம் சுமார் 48 கோடி ரூபாய் வசூலை ஈட்டித் தந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு பிரபல இந்திய நாளிதழ், “”இதுவரை சல்மான்கான் நடித்த படங்களிலேயே “டபாங்’ படத்தில்தான் அவருடைய உடலமைப்பிற்கு ஏற்ற கச்சிதமான பாத்திரம் கிடைத்துள்ளது. அவருக்கென்று ஒரு புது பாணி அமையுமளவிற்கு படம் சிறப்பாக வெளிவந்துள்ளது” என்று கருத்து வெளியிட்டுள்ளது.
சல்மான்கான் மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டிருப்பதும், சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதும்தான் அவரின் சமீபத்திய வெற்றிக்கான காரணம். அதே ஃபார்முலாவில் இப்போது “காவலன்’ விஜய்யும் பிரவேசித்திருக்கிறார். அதற்காக “அட்வான்ஸ்’ வாழ்த்துகளை இப்போதே சொல்லுவோம்!
No comments:
Post a Comment